×

ஓய்வூதியர்கள் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்க மார்ச் 15ம் தேதி கடைசி நாள்: போக்குவரத்து கழக இயக்குநர் அன்பு ஆபிரகாம் தகவல்

சென்னை: மாநகர போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் 2023ம் ஆண்டிற்கான ஆயுட்கால சான்றிதழை  மார்ச் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்து கழக இயக்குநர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்து கழக இயக்குநர் அன்பு ஆபிரகாம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 20,398க்கு மேற்பட்ட பணியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். ஏறத்தாழ 13,900க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்றுள்ளோர்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் வாயிலாக, ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.   

ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்காலச் சான்றிதழை ஏற்கனவே, நடைமுறையில் உள்ளவாறு தாங்கள் கடைசியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற அலுவலகம், பணிமனையிலேயே சமர்ப்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஓய்வூதியதாரர்கள் வரும் 2023ம் ஆண்டிற்கான ஆயுட்காலச் சான்றிதழை, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதிக்குள்ளாக, அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்க வரும்பொழுது, ஓய்வூதிய உத்தரவு ஆணை மற்றும் ஆதார் அட்டையின் நகல் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தலைமையகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தலைமையகத்திலும், பட்டுலாஸ்சாலை தொழிற்கூடம் மற்றும் மண்டல தொழிற்கூடத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், அந்தந்த அலுவலகத்தில் ஆயுட்கால சான்றிதழ் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், கே.கே.நகர் பயணச்சீட்டு அச்சகத்தில்  ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள். கே.கே.நகர் பணிமனையிலும், குரோம்பேட்டை பேருந்து கூடுகட்டும் பிரிவில் ஓய்வு  பெற்ற ஓய்வூதியதாரர்கள் குரோம்பேட்டை-1 பணிமனையிலும் தங்களின் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விடுபட்டவர்கள் தலைமையலுவலகத்தினை அணுகி, தங்களின் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 044-2345 5801 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Transport Corporation ,Love Abraham , Last date for pensioners to submit life certificate is March 15: Transport Corporation Director Anbu Abraham informs
× RELATED அரசு விரைவு போக்குவரத்து கழக...